Thursday, December 27, 2018

மாடம்பாக்கம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்:

வண்டலூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலும், கிழக்கு தாம்பரத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும், ராஜகீழ்ப்பாக்கம் எனும் இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது மாடம்பாக்கம் எனும் சிவத்தலம். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய புராதனத் திருக்கோயில். மூலவர் தேனுபுரீஸ்வரர், அம்பிகை தேனுகாம்பிகை. கபில முனிவர் பசுவடிவில் பூசித்து முத்திப் பேறு பெற்ற தலம் என்று தல புராணம் அறிவிக்கின்றது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய பிரமாண்டமான திருக்கோயில், ஆலய வளாகத்திற்கு வெளியிலுள்ள கபில தீர்த்தமும் அளவில் மிகப் பெரியது, நன்கு பராமரிக்கப்பெற்று வருகின்றது.

தேனுகாம்பிகையைத் தொழுது, சிறிய திருமேனியராய் எழுந்தருளியுள்ள தேனுபுரீஸ்வரரையும் பணிந்துப் பின் உட்பிரகாரத்தை வலம் வருகையில், சுவாமி சன்னிதியின் பின்புறம் வலது கோடியில் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுமாய், மயிலருகில் நின்ற திருக்கோலத்தில், தேவியரும் உடனிருக்க அற்புதமாய் திருக்காட்சி தந்து அருள் புரிகின்றான். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார். 

(ஒரு திருத்தம்: கௌமாரம் வலைத்தளத்தில் 'விலையறுக்கவும்' என்று துவங்கி 'தமனியப்பதி இடங்கொண்டு இன்புறும்சீர் இளைய நாயகனே' என்று முடிவுறும் திருப்பாடலைத் தவறுதலாக மாடம்பாக்கத் திருப்புகழ் என்று குறித்துள்ளனர். 'தமனியம்' என்பது 'பொன்' என்று பொருள்படும், திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள (சுந்தரர்) தேவார வைப்புத் தலமான பொன்னூரே 'தமனியப் பதி' எனும் திருப்புகழ் தலமாகும். இங்கு சிவபெருமான் பராசரேஸ்வரர், காமேஸ்வரர், பிரமேஸ்வரர் எனும் பல்வேறு திருநாமங்களோடு எழுந்தருளி இருக்கின்றார்) - (ஆதார நூல்: திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் பிரமாண நூல்).

(Google Maps: Shri Dhenupureeswarar Temple, Suyambu Lingam, Madambakkam Main Road, Madambakkam, Chennai, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான

தோடுறும் குழையாலே கோல்வளை
     சூடு செங்கைகளாலே யாழ்தரு
          கீத மென்குரலாலே தூமணி ...... நகையாலே

தூம மென்குழலாலே ஊறிய
     தேன்இலங்கிதழாலே !ஆலவி
          லோசனங்களினாலே சோபித ...... அழகாலே

பாடகம்புனை தாளாலேமிக
     வீசு தண்பனி நீராலே வளர்
          பார கொங்கைகளாலே கோலிய ...... விலைமாதர்

பாவகங்களினாலே யான்மயல்
     மூழ்கி நின்றயராதே நூபுர
          பாத பங்கயம் மீதேஆள்வது ...... கருதாயோ

நாடரும்சுடர் தானாஓது!சி
     வாகமங்களின் நானா பேத!அ
          நாத தந்த்ரகலா மாபோதக ...... வடிவாகி

நால்விதம்தரு வேதா வேதமும் 
     நாடி நின்றதொர் மாயாதீத!ம
          னோலயம்தரு நாதா ஆறிரு ...... புயவேளே

வாள் தயங்கிய வேலாலேபொரு
     சூர் தடிந்தருள் வீரா மாமயில் 
          ஏறு கந்த விநோதா கூறென ...... அரனார்முன்

வாசகம் பிறவாதோர் ஞான!சு
     கோதயம் புகல் வாசா தேசிக
          மாடையம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.


No comments:

Post a Comment